இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

"சென்னையில் ஒரு நாள்" திரைப்படத்தின் உண்மைக் கதை (வாசிச்சுப் பாருங்க)

இந்தப் பதிவு முகநூலில் நான் எடுத்த ஒரு பதிவு உங்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். சரி வாசிச்சுப் பாருங்க

ஓர் உண்மை சம்பவம் திரைக்கதையாக மாறும்போது எப்படியெல்லாம் திரிக்கப்பட்டு மசாலா கலக்கப்பட்டு... அந்த உண்மை சம்பவத்தில் உண்மையாக போராடியவர்களின் வாழ்க்கையை சிதைத்து அதை ஓர் சினிமாவாக உருவாக்குகிறார்கள் என்பதற்கு சமீபத்தில் வந்த “சென்னையில் ஒரு... நாள்” படமும் ஓர் உதாரணம்.

2008 செப்டம்பர் 20-ம் தேதியன்று தனது வீட்டருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான் ஹிதேந்திரன். அங்கே அவனது மூளை இறந்துபோய் இருதயம் மட்டுமே துடித்துக் கொண்டிருப்பதாகவும், இனி அவன் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் சொல்லப்பட்டது..! ஹிதேந்திரன் தாய், தந்தை இருவருமே மருத்துவர்கள்தான். சூழ்நிலையை புரிந்து கொண்டார்கள்..!

உடல் உறுப்பு தானம் என்ற மருத்துவம் சார்ந்த தான விஷயத்தை அவ்வளவாக அறிந்திராத அந்தச் சமயத்தில், தீயில் வெறுமனே வெந்து போய் சாம்பலாகிவிடும் அந்த உடல் உறுப்புகள் இன்னும் பலருக்கும் வாழ்க்கையைக் கொடுக்குமே என்ற எண்ணத்தில் ஹிதேந்திரனை கருணைக் கொலை செய்துவிட்டு அவனது உடல் உறுப்புக்களை தானமாக வழங்க அனுமதி தந்தனர் அவனது பெற்றோர்கள்..!

அதன் பேரில் நல்ல நிலையில் இருந்த ஹிதேந்திரனின் கண்கள், கல்லீரல், இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள் ஆகியவை அகற்றப்பட்டன..! கண்கள் சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கும், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் ஆகியவை ஆயிரம்விளக்கு அப்பலோ மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதயம் மட்டுமே சில மணி நேர இடைவெளியில் வேறு உடலில் பொருத்தப்பட்டாக வேண்டும் என்கிற கட்டாயம் இருந்ததினால், உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராக இருப்பவர்கள் யார் என்று சென்னையில் தேடப்பட்டது. கடைசியாக சென்னை முகப்பேரில் இருக்கும் டாக்டர் செரியரின் இருதய மருத்துவமனையில் இருந்த பெங்களூரைச் சேர்ந்த தமிழ் சிறுமி அபிராமி கண்டறியப்பட்டாள்.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக தயார் நிலையில் இருந்த அபிராமிக்கு ஹிதேந்திரனின் இதயத்தை பொருத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் தேனாம்பேட்டை அப்பலோவில் ஹிதேந்திரனின் உடலில் இருந்து அகற்றப்படும் இதயத்தை, முகப்பேரில் இருக்கும் செரியனின் மருத்துவமனைக்கு மிக விரைவில் எப்படி கொண்டு போய்ச் சேர்ப்பது என்று யோசித்தார்கள் மருத்துவர்கள்..!

காவல்துறையின் உதவியின்றி இதனை விரைந்து தனியாக செயல்படுத்த முடியாது என்று முடிவு செய்து காவல்துறைக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுடைய உதவியுடன் தேனாம்பேட்டையில் இருந்து முகப்பேர் வழி நெடுகிலும் டிராபிக்கை நிறுத்திவைத்து, 14 கிலோ மீட்டர் தூரத்தை, வெறும் 11 நிமிடங்களில் கடந்து சென்று செரியன் மருத்துவமனையில் இதயத்தை ஒப்படைத்தது காவல்துறை.. அந்தச் சிறுமி அபிராமிக்கு இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு சாதனை படைத்தனர்.

இந்த சம்பவத்தைத்தான் 2011-ம் ஆண்டு மலையாளத்தில் ‘டிராபிக்’ என்ற பெயரில் படமாக எடுத்து சூப்பர் ஹிட்டாக்கினார்கள். இப்பொழுது தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். உண்மைக்கதையை அழகாக சொல்லி ஓர் திரைக்காவியமாக்கிருக்கலாம். ஆனால் படத்தின் விறுவிறுப்புக்காக பல புதிய காட்சி அமைத்து போராடியவர்களின் கேரக்டரை சிதைத்து படம் எடுத்திருக்கின்றனர்.

இதயத்தை கொண்டு செல்லும் வழியில் இத்தனை பிரச்சினைகளா..? என்ற கேள்வியை படம் பார்ப்பவர்கள் மனதில் எழச் செய்கிறது.

0 comments:

கருத்துரையிடுக