நாளை மறுநாள் ஒரு பரீட்சை ஆனாலும் இப்போது, இன்னைக்கு இந்த வீடியோவை பார்த்த பின்னர் உள்ளெளும் உணர்வுகளைக் கொட்டித்தீர்த்தே ஆக வேண்டுமெனத் தோன்றியதும் இதோ எழுதுகிறேன்.
செப்டம்பர் 15, 2000 வந்த படம். எனக்கு 2 வயது. முதன்முதலாக இந்தப் படம் பார்க்கும் போது 2010 க்கு பின்னர் என்று தான் நினைக்கிறேன் அதுவும் கே டிவியில் என்று தான் ஞாபகம். பார்த்ததும் பிடித்தது அந்த நவி மும்பை, ஊட்டி மற்றும் ராஜஸ்தான் இன் அழகிய காட்சியமைப்பும், இசையும் அதன் வரிகளும்.
ஆஹா, வைரமுத்துவின் கவித்துவம் உச்சம். ஐம் பூதங்கள் (தீ, காற்று, நிலம், ஆகாயம், நீர்) உள்ளடக்கிய 5 பாடல்கள். எப்போது கேட்டாலும் வரிகள் நன்றாக ஞாபகமாய் இருக்கிறது. ரகுமானின் இசை அதைவிட அபாரம். பாடல்களை இரசிக்க மட்டும் தான் முடியும் அதை எழுத என்னால் முடியவில்லை. உணர்தலில் தான் காதல் உண்டு என்பதைப் போல ரிதம் பாடல்களும் அதே வகை.
“காற்றே என் வாசல் வந்தாய்”
“நதியே நதியே காதல் நதியே” - பெண்ணை நதியுடன் ஒப்பிடல்
“தனியே தன்னந்தனியே”
“கல கலவென பொழியும்”
“ஐயோ பத்திகிச்சு” - ரம்யா கிருஷ்ணன் பாட்டில் இருப்பதால் இன்னும் அதிகமாக பத்தும்...
கணவனை இழந்த பொண்ணு, மனைவியை இழந்த ஆண் --- அவர்களுக்குள் வரும் நட்பு, பரிமாறப்படும் அன்பு. அழகாகச் சொல்லும் திரைக்காவியம்...
பிடித்த சீன்கள்:
- அர்ஜினும் மீனாவும் பாங்க் கவுண்டரில் தமிழில் சொல்வதும் அதைத் தொடர்ந்து வரும் அர்ஜின் - மணிவண்ணனின் தமிழ் நண்டுக் கதை.
- மீனா - அரவிந்த் காட்சியில், மை கலஞ்சிருக்குனு சொல்ல மீனா பரவால்ல எனும் போது மீனாவின் முகபாவனை
- ஜோதிகா, அர்ஜினின் வேலை செய்வதற்கு மறுப்புத் தெரிவிக்காமல் அவருக்கு வருவதை தடுக்க கூடாது எனும் போது பகிரப்படும் அன்பு
- அர்ஜின் - அவரது அம்மா இடையில் இடம் பெறும் உரையாடல் “உனக்கு ஏதும் நல்லது நடக்கலாம்”
இருந்தாலும் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம் மிஸ்டர் கார்த்திகேயன்
- கார்த்திக் சேர வீட்ட கூப்பிட்டுக்கலாமா என மீனா அவர் மகனிடம் கேட்கும் காட்சி
இப்படி படம் முழுக்க மெல்லிய சாரலாக பல சீன்கள் இழையோடி இருக்கும்.
படம் பார்த்து ரொம்ப நாள் ஆனால் இவளவும் ஞாபகத்தில் நிற்பதற்கு காரணம் அதன் கதையும், கதாபாத்திரங்களும் தான். 25 என்ன 50 வருடமானாலும் ரிதம் என்றும் ரிதமாகவே இருக்கும் அதே இளமையோடு. 25 வருட பூர்த்திக்கு ஒரு ரீ-ரிலீஸ் செய்தால் அருமையாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
ஹ்ம்ம்... போதும் Jira வில் செய்ய வேண்டிய tasks களும், எக்ஸாமும் அழைப்பதால் நிறுத்திக் கொள்கிறேன்.
நன்றி....
0 comments:
கருத்துரையிடுக