இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 9 ஏப்ரல், 2020

மஹாகவியின் "ஆறில் ஒரு பங்கு"

எல்லோரையும் கொரோனா காரணமாக தனித்திருக்க சொல்லிவிட்டதானால் வீட்டில் காலையில் எழுந்து, வழமையான வேலைகளை செய்துவிட்டு கல்லூரிப் பாடங்கள் படிப்பது, பாட்டுக் கேட்பது என்று முதல் 4 நாள்கள் சென்றன.

"ஆறில் ஒரு பங்கு" எனத் தலைப்பிடப்பட்டு ஸ்ரீ.சி.சுப்பிரமணிய பாரதி என ஒரு சிறுகதைப் புத்தகம் என் கண்ணில் பட்டது. புத்தகத்தின் நிலையை பார்த்தால் பல ஆண்டுகள் ஆகி இருக்கும் என்று நினைத்தேன். நெடுங்காலமாக பூட்டப்பட்டிருந்த நூலகம் ஒன்றில் இருந்து எடுத்து வந்திருந்தேன். காரணம் அது மஹாகவி பாரதியார் புத்தகம். இப் புத்தகம் 1910-1911 வாக்கில் வெளி வந்ததாகவும் அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சியில் தடை செய்யப்பட்ட ஆக்கம் எனவும் அது பின்னர் 1980 களில் மீண்டும் வெளிவந்ததாகவும் தான் அறிந்ததாக நண்பர் ஒருவருடன் WhatsApp ல் உரையாடும் போது சொல்லியிருந்தார்.

அதை பற்றிய சிந்தனைகளுடன் புத்தகத்தை வாசிப்போம் என முடிவு செய்தேன். அதை ஏன் தடை செய்ய வேண்டும்? என்ன கதைக் கருவாக இருக்கும் என்ற ஆவலுடன் ஆரம்பித்தேன்.


கதையின் நாயகன் கோவிந்தராஜனின் புரசைவாக்கத்தில் உள்ள வீட்டுக்கு கல்வி கற்பதற்காக தஞ்சாவூரிலிருந்து வரும் மாமன் மகள் மீனம்பாளுக்கும் இடையிலான காதல் கதை. சுதந்திர தாகத்தால் காதலை வேண்டாம் என்று மறுக்கும் நாயகன் (அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற அன்றய / இன்றய சமூக நிலையை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கம் என்று கூட சொல்லலாம்), நாயகனைப் பிரிய மனமில்லாமல் கல்யாண தினத்தன்று அவள் கனவில் தேவி (சரியாக எந்த தேவி என்று ஞாபகம் இல்லை - ஒரு பெண் கடவுள்) தோன்றி அவளின் வீட்டின் ஒரு மூலையில் இருக்கும் இலைகளை அரைத்துக்குடி என்று கூறியதாகக் கூறி நாயகனுக்கு கடிதம் எழுதி தற்கொலை செய்கிறாள். பின்னர், 2 வருடங்கள் கழித்து கல்கத்தா செல்லும் கோவிந்தராஜனுக்கு மீனம்பாள் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறாள் என்று தெரிய வந்து, மேகத்தினிடையே மறைந்திருந்த சந்திரனைப் போல காதல் மீண்டும் துளிர்க்க அவளைக் காண காசி செல்கிறார். இறுதியில் இருவரும் இணைந்தனரா என்பது தான் கதை.

ஒரு வேளை இந்தக் கதை தடை செய்யப்படக் காரணம் பாரதி எழுதிய சில உண்மையான எதார்த்தமான எடுத்துக் காட்டுகளாகக் கூட இருக்கலாம்.

“பாரத தேசத்தார் அனைவரும் நெஞ்சில் வளர்த்து வந்த பக்திகளெல்லாம் இழிந்த அநாகரிகமான மூட பக்திகள் என்பது முதலான ஆங்கிலேய சத்தியங்கள் எல்லாம் என் உள்ளத்திலே குடிபுகுந்துவிட்டன. ஆனால், கிறிஸ்துவப் பாதிரி ஓர் வினோதமான ஜந்து, ஹிந்து மார்க்கத்திலும், ஹிந்து நாகரீகத்திலும் பக்தி செலுத்துவது பேதமை என்று ருஜூப்படுத்திக்கொண்டு வரும்போதே, அவர் கொண்டாடும் கிறிஸ்து மார்க்கமும் மூடபக்தி என்று வாலிபர் மனதில் படும்படி ஏற்பாடு செய்துவிடுகிறார். மத விஷயங்களைப் பற்றி விஸ்தாரமான விவகாரங்கள் எழுதி, படிப்பவர்களுக்கு நான் தலைநோவு உண்டாக்கப்போவதில்லை. சுருக்கம் நான் எனது பூர்வ மதாசாரங்களில் பற்று நீங்கி, ‘ஞான ஸ்னானம்’ பெறவில்லை; பிரம்ம ஸ்மாஜத்திலே சேர்ந்து கொண்டேன்”
மத மாற்றம் இன்று, நேற்றல்ல ஆங்கிலேயர் காலத்திலிருந்தே நடந்து வருகிறது என்பதை பாரதி தன் எழுத்துக்களால் எடுத்தியம்பியுள்ளார். இதை விடவும், ஹிந்து மதத்துக்குள் தாழ் சாதியினர் என்ற பாகுபாடு காட்டப்பட்டு ஒதுக்கப்படுவது மத மாற்ற சபையினருக்கு மேலதிக உற்சாகத்தை தருகிறது.
"நம்மில் ஆறில் ஒரு பங்கு ஜனங்களை நாம் தீண்டாத ஜாதியாக வைத்திருப்போமானால் நமக்கு ஈசன் நல்ல கதி கொடுப்பாரா?”
கதையின், தலைப்பு இங்கே தான் நமக்கு தெளிவாக விளங்குகிறது. நாயகன், நாயகி இருவருக்குமே ஒரே மன இயல்பு சமூகத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளை அழிக்க வேண்டும். சுதந்திரக் காற்று பாரதத்தில் வீச வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்கள்.

மேலும், ஒரு சில வாசிப்புக்களின் மூலமாக தமிழில் வெளி வந்த முதல் சிறுகதை எனக் கூட இதை எடுக்கலாம் என வாசித்திருக்கிறேன். காரணம், 1911 களில் இது வெளிவந்திருக்கிறது. இந்தக் கதையை நிச்சயமாக ஒரு நாவலாகக் கூட எழுதலாம். அனால், பாரதி அதை சுருக்கமாக சொல்லி முடித்திருக்கிறார்.

இக் கதையினூடாக பாரதி தான் விரும்பும் சில விடயங்களை கூற முனைந்திருப்பர் என எண்ணுகிறேன்.
சமூக ஏற்றத் தாழ்வுகள் குறையும் போது தான் நாம் எதையும் சாதிக்க முடியும், இல்லையேல் நாம் அழிவது உறுதி.

இரவில் தனிமையில் நாயகனும், நாயகியும் சந்திக்கும் காட்சியை விபரிப்பார்; உண்மையில் அக் கால கட்டத்தில் நடக்க முடியுமா என்பது சந்தேகம் தான். எப்படியெல்லாம் பெண்கள் இருக்க வேண்டும் என்பதை மீனம்பாள் என்ற கதாப்பாத்திரத்தினூடு சொல்லிச் சென்றிருக்கிறார் பாரதி.
தைரியம், துணிச்சல் மிகுந்த பெண், எண்ணியது துணிதல் என ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் எதோ ஒரு சாதனையை நிகழ்த்த வேண்டும் என எண்ணிச் சென்ற அந்த முண்டாசுக் கவிஞனை இன்று எத்தனை பேர் ஆர்த்மார்த்தமாக நினைக்கிறார்கள்.

பாரதி கவிதைகள் என்றால் சமூக வலைத்தளங்களில் ஒரு சின்ன கேலியாவது இருப்பதைப் பார்க்க முடிகிறது. நான் கல்வி கற்ற இலங்கையில் உள்ள யாழ்பாணக் கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் பாரதி பிறந்த நாளுக்கு பாரதி தினம் என செப்டெம்பர் மாதம் கொண்டாடுகிறார்கள். இத்தனைக்கும் அது அமெரிக்கன் மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவப் பாடசாலை.

இன்னும் பாரதியை வாசிக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது. பாப்போம்..

நன்றி,
அன்புடன்,
பரதன்.

மேலும் சில வாசிப்புகளுக்கு:
ஆறில் ஒரு பங்கு - சுப்பிரமணிய பாரதியார் (ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்ட நூல்)

எழுத்தாளர் ஜெயமோகன் இச் சிறுகதை பற்றி எழுதிய கட்டுரை

0 comments:

கருத்துரையிடுக