வியாழன், 18 செப்டம்பர், 2025

Life of ரிதம் - 25 ஆண்டுகள்

பார்த்து விட்டு வாசிக்கவும்....

வணக்கம்,

நாளை மறுநாள் ஒரு பரீட்சை ஆனாலும் இப்போது, இன்னைக்கு இந்த வீடியோவை பார்த்த பின்னர் உள்ளெளும் உணர்வுகளைக் கொட்டித்தீர்த்தே ஆக வேண்டுமெனத் தோன்றியதும் இதோ எழுதுகிறேன்.

செப்டம்பர் 15, 2000 வந்த படம். எனக்கு 2 வயது. முதன்முதலாக இந்தப் படம் பார்க்கும் போது 2010 க்கு பின்னர் என்று தான் நினைக்கிறேன் அதுவும் கே டிவியில் என்று தான் ஞாபகம். பார்த்ததும் பிடித்தது அந்த நவி மும்பை, ஊட்டி மற்றும் ராஜஸ்தான் இன் அழகிய காட்சியமைப்பும், இசையும் அதன் வரிகளும்.

ஆஹா, வைரமுத்துவின் கவித்துவம் உச்சம். ஐம் பூதங்கள் (தீ, காற்று, நிலம், ஆகாயம், நீர்) உள்ளடக்கிய 5 பாடல்கள். எப்போது கேட்டாலும் வரிகள் நன்றாக ஞாபகமாய் இருக்கிறது. ரகுமானின் இசை அதைவிட அபாரம். பாடல்களை இரசிக்க மட்டும் தான் முடியும் அதை எழுத என்னால் முடியவில்லை. உணர்தலில் தான் காதல் உண்டு என்பதைப் போல ரிதம் பாடல்களும் அதே வகை.

“காற்றே என் வாசல் வந்தாய்”

“நதியே நதியே காதல் நதியே” - பெண்ணை நதியுடன் ஒப்பிடல்

“தனியே தன்னந்தனியே”

“கல கலவென பொழியும்”

“ஐயோ பத்திகிச்சு” - ரம்யா கிருஷ்ணன் பாட்டில் இருப்பதால் இன்னும் அதிகமாக பத்தும்...

கணவனை இழந்த பொண்ணு, மனைவியை இழந்த ஆண் --- அவர்களுக்குள் வரும் நட்பு, பரிமாறப்படும் அன்பு. அழகாகச் சொல்லும் திரைக்காவியம்...

பிடித்த சீன்கள்:

- அர்ஜினும் மீனாவும் பாங்க் கவுண்டரில் தமிழில் சொல்வதும் அதைத் தொடர்ந்து வரும் அர்ஜின் - மணிவண்ணனின் தமிழ் நண்டுக் கதை.

- மீனா - அரவிந்த் காட்சியில், மை கலஞ்சிருக்குனு சொல்ல மீனா பரவால்ல எனும் போது மீனாவின் முகபாவனை

- ஜோதிகா, அர்ஜினின் வேலை செய்வதற்கு மறுப்புத் தெரிவிக்காமல் அவருக்கு வருவதை தடுக்க கூடாது எனும் போது பகிரப்படும் அன்பு

- அர்ஜின் - அவரது அம்மா இடையில் இடம் பெறும் உரையாடல் “உனக்கு ஏதும் நல்லது நடக்கலாம்”

இருந்தாலும் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம் மிஸ்டர் கார்த்திகேயன்

- கார்த்திக் சேர வீட்ட கூப்பிட்டுக்கலாமா என மீனா அவர் மகனிடம் கேட்கும் காட்சி

இப்படி படம் முழுக்க மெல்லிய சாரலாக பல சீன்கள் இழையோடி இருக்கும்.

படம் பார்த்து ரொம்ப நாள் ஆனால் இவளவும் ஞாபகத்தில் நிற்பதற்கு காரணம் அதன் கதையும், கதாபாத்திரங்களும் தான். 25 என்ன 50 வருடமானாலும் ரிதம் என்றும் ரிதமாகவே இருக்கும் அதே இளமையோடு. 25 வருட பூர்த்திக்கு ஒரு ரீ-ரிலீஸ் செய்தால் அருமையாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

ஹ்ம்ம்... போதும் Jira வில் செய்ய வேண்டிய tasks களும், எக்ஸாமும் அழைப்பதால் நிறுத்திக் கொள்கிறேன்.

நன்றி....

திங்கள், 8 செப்டம்பர், 2025

லோகா: மனிதக் காட்டேரி கல்யாணி

ராஜாவின் பாடல்கள் ஓர் அலாதியானவை. கேட்கக் கேட்கத் திகட்டாத இன்பம் தருபவை. இன்று அவரின் பாடல்களைப் பயன்படுத்தாமல் retro காட்சிகளை கொண்டுவருவது trend ஆகிவிட்டது. இதுவரை காலமும் எந்தவித காப்புரிமைகளும் வாங்காமல் இருந்தவர் திடீரெனக் கிளம்பியதும், பலராலும் ஜீரணிக்க முடியவில்லை. கலந்த விமர்சனங்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். ராஜா என்றும் ராஜா தான். “கிளியே கிளியே மணி மணி மேகத் தோப்பில்” என்று ஒரு மலையாளப் பாடல் ராஜாவின் இசையில் ஜானகி அம்மா குரலில் சொர்க்கமாக இருக்கும்.

சில வருடங்கள் முன் இதன் ரீமிக்ஸ் வடிவம் அருமையாக இருந்தது கேட்ட ஞாபகம். இப்போது 1 கிழமைக்கும் முன்னர், மலையாள நடிகை கல்யாணி பிரியதர்சனின் நடிப்பில் லோகா என்ற ஒரு படத்தின் முன்னோட்டம் மற்றும் சில ரீல்கள் இன்ஸ்டாகிரமில் உலாவியதைப் பார்த்தேன். அதிலும் இந்த ரீமிக்ஸ் பாடல் பயன்படுத்தப்பட்டு இருந்தது. படத்தைப் பற்றிய பின்னூட்டங்களும் மிக அருமையாக இருந்தது. படம் யாழ்ப்பாணத்தில் ஓடவில்லை என்பது உறுதிப்படுத்திக் கொண்டேன். பின்னர், கொழும்பில் ஹாவலொக் ஸ்கோப் சினிமாஸில் ஓடுவதைப் பார்த்து அங்கேயே பார்க்கலாம் என்ற முனைப்புடன் செப்டெம்பர் 6 இலங்கையில் ஹவலொக் மைதானத்தில் தேனிசைத் தென்றல் தேவாவின் கச்சேரியும் இடம்பெற்றது அதற்கு செல்வதற்காகவுல் பதிவு செய்திருந்தேன்.

அங்கு சென்று இசை நிகழ்ச்சியை இரசித்து விட்டுப் பின்னர் தியேட்டருக்கும் சென்று இப்படத்தை காணச் சென்றேன். எனக்குப் பொதுவாகவே யாழ்ப்பாணத்திலுள்ள திரையரங்குகளை விட கொழும்பில் உள்ள திரையரங்குகளின் ஆசனம், மற்றும் ஒலியமைப்பு மிகவும் பிடிக்கும். அதற்காகக் கூட சில முறை படங்கள் பார்க்க செல்வதுண்டு. கொடுக்கும் பணத்திற்கு திரை அனுபவம் கிடைத்தல் மிக அவசியம்.

சரி, படத்தின் கதை மிக எளிமை. கேரள நம்பூதிரிகள், மற்றும் அவர்களின் புராணத்தின் அடிப்படையில் கல்லியங்காட்டு நீலி என்ற ஒரு சாகாவரம் பெற்ற பெண் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறார் அவர் மலைவாழ் மக்களுக்கும், மனித குலத்திற்கும் நன்மை மட்டுமே செய்யும் ஓர் யக்‌ஷி (காட்டேரி) யாக காலம் காலமாக சொல்லப்படிகிறார். இணையத்தில் தேடியது வரை பல தரப்பட்ட வகையில் இந்த நீலி/யக்‌ஷி கதைகள் காணப்படுகின்றன. இந்த ஒரு சின்ன புராணக் கதையின் அடிப்படையில் வைத்து மொத்த படத்தையும் அதகளப்படுத்தியிருக்கிறார்கள். எங்கும் சலிப்பு என்பதற்கு இடமில்லாத வகையில் மிகவும் ஸ்வாரசியமாக திரைக்கதை கொண்டு சென்று இருக்கிறார்கள். கல்யாணி நீலியாக மிரட்டியிருக்கிறார். ஹ்ருதயம் படத்தில் ஓர் சாந்த சொரூபியாக வந்த்தவரா இப்படி எனும் அளவிற்கு தரமான செய்கை.

கேரளா எனக்கு மிகவுல் பிடித்தமான கலை, கலாச்சாரம், பண்பாடுகளைக் கொண்ட பிரதேசம். தமிழை அதிகம் விரும்புவோரும் அவர்களே. வரலாற்றின் சில பின்னணி கூட யாழ்ப்பாணத் தமிழர்கள் பெரும்பாலும் கேரள வம்சாவளியினர் எனக் கூட சொல்லப்படுகிறார்கள் அதனாலோ என்னவோ அதிகம் பிடித்தும் விடுகிறது பல மலையாளப் பாடல்களும், படங்களும்.

கதையை சொல்வது என் நோக்கம் அல்ல, இந்த புராணம், இலக்கியங்களை வைத்தே நாம் பல சினிமாக்களை உருவாக்க முடியும் அப்படியாக மலையாள சினிமாவால் முடியும் என்றால் தமிழும் அதற்கு சளைத்ததல்ல. தமிழ் சினிமாவும் தனக்கான தனித்துவத்தை பேண வேண்டும் இன்னும் இன்னும் தமிழ்க் கலையில் நாம் படமாக்கக்கூடிய எத்தனையோ கதைகள், இலக்கிய நாவல்கள் செழிப்பான கதையம்சங்களுடன் உள்ளன அவற்றை இவர்களும் பயன்படுத்த வேண்டும் என்பதே என் அவாவும்…

நன்றி….

பரதன்
செப்டெம்பர் 08, 2025